பதுங்குகுழி
பதுங்குகுழி
>>> 1
நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் அவன் மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்றுஞ் ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய் அம்மாவையும் சகோதரங்களைப் பார்த்துவருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித்தலைவனிடம் மன்றாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ஐயர்களை வீட்டுக்கு வரவழைத்து விமர்சையாகத் திவஷங்கள் செய்வதில்லை. கோவிலில் ஒரு பூஜை, வீட்டில் ஒரு காய்கறிச்சமையல் படையலோடு சரி.
தேசத்தை விடுவிக்கவேண்டுமென்கிற உந்துதலில் விருப்பில் அவனாகத்தான் இயக்கத்தில்போய்ச் சேர்ந்தான். பயிற்சியின்பின் எப்படியும் ஒரு பத்துவருஷங்களில் தேசத்துக்கு ஒருவிடிவு வந்துவிடும் என்கிற நம்பிக்கையில்தான் இத்தனை காலத்தையும் பாசறையில் கழித்தான். ஆனால் இன்னும் மூச்சா போவதென்றாலும் பொறுப்பாளன் அனுமதித்தால்தான் போகலாமென்கிற வரைமுறையை அவன் மனம் ஒப்பவில்லை. இலக்ஷியங்கள் எல்லாம் சரிதான். நடைமுறையில்தானே வெறுப்பை உண்டாக்கிறார்கள்? சமயத்தில் தப்பி ஓடிவிடலாமா என்றும் குறுக்குச் சிந்தனைகள் வரும். பின் இளமதிக்கு நேர்ந்ததை நினைக்க மனம் ஒரு கணம் ’துணுக்’கென்றுவிட்டுப் பின் வாங்கும்.
அழகசிங்கத்தின் மகன் இளமதிக்கு கிழக்கு மாகாணத்தை மெல்ல மெல்ல இழக்க நேர்ந்ததுவும் முடிவுதெரியாமலும் தொடர்ந்துகொண்டுமிருந்த போராட்டம் சலிப்பைத்தரவும் இயக்கத்தைவிட்டு ஓடிவிடச்சமயம் பார்த்துகொண்டிருந்தான்.
பிரித்தானியாவிலிருந்து அவனது அத்தையும் அவனுக்கு ‘நீ கொழும்புக்கு வந்திட்டாயானால் உன்னை எப்படியாவது மத்தியகிழக்கு நாடுகளுக்கோ இத்தாலிக்கோ நான் அனுப்பிவைக்கிறேன்’ என்று உறுதியளித்திருந்தாள்.
ஒருநாள் எல்லைக்கண்காணிப்புக்கென்று போனவன் அப்படியே கால்நடையாக மன்னாருக்குப்போய் அங்கிருந்து கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தான். கொழும்பிலும் அங்கே தங்கவும், கடவுச்சீட்டு எடுக்கவும் யோகபுரம் கிராமசேவகரிடமிருந்தும், துணுக்காய் உதவி அரசாங்க அதிபரிடமிருந்தும் சில ஆவணங்கள் தேவைப்பட மீண்டும் வன்னிக்குப்போனவன் அங்கே இயக்கத்தினரிடம் மாட்டுப்பட்டான். மீண்டும் இயக்கப்பணிகள். ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தப்பி ஓடியவன் இரண்டாவதுதடவை பிடிபட்டதும் தண்டனையாகப் படுமோசமாகத் தாக்கப்பட்டான். இசகுபிசகாக அடியெங்கோ விழுந்ததில் முள்ளந்தண்டில் தட்டுவிலகல் ஏற்பட்டு அவனால் எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாமல் போகவும் வீட்டில் கொண்டுவந்து போட்டு விட்டுப்போனார்கள் தோழர்கள்.
ஒவ்வொரு தாக்குதலையும் நடத்திமுடிக்கையில் தீர்ந்துபோவன வெறும் ரவைகளும் வெடிமருந்துகளும் குண்டுகளும் மாத்திரமல்ல பல உயிர்களுந்தான். அத்தனை வேட்கையோடும், அர்ப்பணிப்போடும், தியாகத்தோடும் போராடும் ஒரு இயக்கம் ஏனோ தாம் வழங்கும் தண்டனைகளால் ஏற்படும் அபகீர்த்தியை அது சட்டைசெய்வதில்லை.
இன்னும் பெற்றோரின் சம்மதமில்லாமலே பிள்ளைகளைப் பிடித்துப்போவதும் போதிய பயிற்சியில்லாமல் அவர்களைக் களத்தில் இறக்குவதையுமிட்டு தம்மூர்மக்கள் இயக்கத்தின்மீது படுகோபமாக இருப்பது தெரிகிறது. விடுதலை என்பது மக்களுடன் இணைந்தே சாதிக்கப்படவேண்டியது. ஊர்ப்பெரியவர்கள் கூடப்படித்தவர்கள் நண்பர்கள் எல்லாம் இப்போது அவனுடன் கண்ட கண்ட இடங்களில் காரசாரமாக விவாதிக்கிறார்கள். இதுவே நாம் மக்களிடமிருந்து அந்நியமாகச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளம். முதலில் முஸ்லிம் மக்களிடமிருந்து அந்நியமானோம். இப்போ வன்னிமக்களும் காயத்தொடங்கிவிட்டார்கள். “அய்யாமாரே அப்பாமாரே (போராளிகள் அப்படித்தான் ஊரவரை அழைக்கவேண்டுமென்பது உத்தரவு) நான் ஒரு இளநிலைப்போராளிதான். உதுகளுக்கு மேலிடத்திலயுள்ள பெரியவர்கள்தான் பதில்சொல்ல வேணும்” என்றுவிட்டு அவர்களிடமிருந்து கழன்றுவிடுவான். மாதவனுக்கு தான் இன்னும் சீருடையுடன் ஊருக்குள் வந்தால் யாராவது இருட்டடி போடலாம் என்றொரு பயமும் தொட்டுவிட்டிருந்தது.
இனிமேல் இயக்கத்தில் இருந்துகொண்டு போராடினாலும் போராடாவிட்டாலும் மரணம் வெகுநிச்சயமாகி விட்டதை அவன் உள்ளுணர்வுகள் சொல்லின.
யோகபுரம் என்பது 1950களின் கடைசியில் (தற்போதைய முல்லைமாவட்டம்) வவுனிக்குளநீர்ப்பாசனத் திட்டத்தில் தோற்றம் பெற்ற ஒரு குடியேற்றக்கிராமம். ஐந்து யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு யூனிட்டிலும் சராசரியாக முன்னூறு வரையிலான குடும்பங்கள் ஆதியில் குடியேற்றப்பட்டன. கொலொனிவாசிகளுக்கு இரண்டு அறையுடன்கூடிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பாரவுந்துகளில் அங்கே வந்து அவற்றைக் கைப்பற்ற முயன்றதும் பின் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதுமான ஒரு வரலாறும் அதற்குண்டு.
யோகபுரத்தின் தென்மேற்குப்பகுதியை இடதுகரை என்பார்கள். இடதுகரையின் தெற்குமேற்குப் பகுதிகளில் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் ஊடாட்டங்களைச் சீருடை அணியாது நின்று கண்காணிப்பதும் தகவல் தருவதும் அவனது பணி.
பாண்டியன்குளத்தின் இடதுகரைக்குப்போகும் வயல்கள் சூழ்ந்த கிரவல்பாதையில் தனது மிதியுந்தைச் சோர்வாக மிதித்தபடி வந்துகொண்டிருந்தான். வெய்யிலின் காங்கை அழத்திக் கொண்டிருந்தாலும் பாலியாற்றை அண்மிக்கவும் அவளோடு விளையாடி அவளின் சீதளத்தைப் பகிர்ந்துவந்த காற்றலைகள் இவன் முகத்தில் ஒத்தியபோதுண்டான சுகத்தை அனுபவித்தான்.
பறங்கியாற்றின் படுகைகளில் கசிந்து பொசிந்து உற்பத்தியாகி வவுனிக்குளத்தை நிறைத்த பின்னால் இன்னும் பாசனக்காலத்தில் குளத்தின் பாய்ச்சல் வயல்களால் எஞ்சிவடியும் நீரையும் சேர்த்துகொண்டுபாயும் பாலியாறு யோகபுரத்தையையும் இடதுகரையையும் பிரித்துக்கொண்டு ஓடி மன்னார் கடலில் சங்கமமாகிறது. பாலியின் படுகையில் இருக்கும் பாறைகளும், ஐந்துபேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத மொத்தத்தில் மருதமரங்கள் வரிசையாக நிற்பதுவும், இச்சமவெளியில் எத்தனை ஆயிரம் ஆண்டுகாலங்களாக ஓடியிருந்தால் இத்தனை ஆழமான பள்ளத்தாக்கை உண்டாக்கியிருக்கமுடியும் என்று அவளைக் கடக்கும்போதெல்லாம் எண்ணுவான்.
வடமத்தியமாகாணத்தில் நல்லமழைபெய்து மல்வத்துஓயா, கனகராயன் ஆறு, பறங்கியாறு வழிந்து ஓடினாலே பாலியாறும் பெருகிக் குளிர்ந்து ஆர்ப்பரித்து ஓடும். இல்லையென்றால் அவளும் மெலிந்து இளைத்து மந்தமாகவே முனகியபடி நடப்பாள். ஆற்றின் படுகைககளில் விவசாயம் செய்வோர் பம்புகள்போட்டு கொஞ்சநஞ்சமுள்ள நீரையும் இறைத்து எடுத்துவிடுவார்கள். இப்போதும் பாலி நலிந்துபோயே இருந்தாள். பாலிக்கொரு பாலம் அமைக்கவேண்டும் என்கிற இப்பகுதி மக்களின் ஐம்பதாண்டுகாலக்கோரிக்கை இன்னும் கோப்புக்களிலேயே பத்திரமாகக் கிடக்கிறது.
மாதவன் மிதியுந்தை உருட்டிக்கொண்டு ஆற்றுக்குக் குறுக்காக நடந்தான். பாலியாற்றுத் தண்ணீரில் செய்யப்படும் சமையலுக்குண்டான தனிச்சுவை சொல்லிமாளாது. அவன் வீட்டோடு இருந்த காலத்தில் பலதடவைகள் மிதியுந்தில் குடத்தைக்கட்டிவந்து மொண்டுபோயுமிருக்கிறான்.
>>> 2
இந்தியா இலங்கையுடன் பாதுகாப்பு தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின்பேரில் என்று சொல்லிக்கொண்டு பாக்குநீரிணையில் சிறிய அளவிலான தனது போர்க்கப்பல்களை நிறுத்திவைத்து இலங்கைக்கடற்படைக்கு ஏதேதோ பயிற்சிகளெல்லாம் வழங்கிக் கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் கடற்புலிகளும் எதற்கு வீண்வம்பென்று தமது நடமாட்டத்தை மேற்குக்கடலில் குறைந்துக்கொண்டிருந்தனர்.
அவ்வேளையை இலங்கை இராணுவம் சாதகமாகப் பயன்படுத்தி மன்னார் பிரதேசத்தின் இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய இடங்களில் தன் படைத் தளங்களை ஸ்திரம் செய்துகொண்டதுடன் அதன் 57 வது படைப்பிரிவு (2008 டிசெம்பர் மாதத்திலிருந்து) கடற்கரையோரமாக மெல்ல மெல்ல கள்ளியடி, ஆத்திமோட்டை, முண்டம்பிட்டி என அங்குலம் அங்குலமாக முன்னேறி வெள்ளாங்குளத்தில் கனரகபோர்த்தளவாடங்களுடன் நிலை கொண்டது. மேலும் மேல்நோக்கி வடக்காக ஊர்ந்து நகர்ந்த இராணுவம் நாச்சிக்குடாவில் (இது நொச்சிக்குடா என்பதன் மருவல்) கடற்கரையோரமாக நிலைகொண்டு லபக்கென இரவோடிரவாக ஜெயபுரம், கிராஞ்சி, வேரவில், சுன்னாவில், செம்பன்குன்று என்று முக்கோணவடிவிலமைந்த ஐநூறு சதுர கிலோமீட்டர் பகுதியை விடுதலைப்புலிகளின் எதிர்ப்பில்லாமலே கைப்பற்றிக்கொண்டது.
அப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளிடமும் எல்லைக்காவலுக்கு வேண்டியதொகையில் காப்பரண்களும் எதிர்ப்புத்தளவாடங்களும் போராளிகளும் இல்லாதது இராணுவத்தினரின் இத்திடீர் ஊடுருவலுக்கு வாய்ப்பானது. இது விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இராணுவத்தினர் தமது இந்நிலையூன்றலை மேற்குவன்னி முழுவதையும் தாம் கைப்பற்றி விட்டதாகப் பிரகடனஞ் செய்ததுடன் அனைத்து ஊடகங்கள் மூலமும் பிரச்சாரமும் செய்தனர்.
பின் தினமும் ஜெயபுரம், கிராஞ்சி, பனங்காமம் ஆகியபகுதிகளிலிருந்து இராணுவம் ஏவும் எறிகணைகள் ஆலங்குளம், உயிலங்குளம் பகுதிகளில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.
ஏககாலத்தில் மடு, பழம்பிட்டி, பெரியமடு நிலைகளில் இருந்த இராணுவத்தின் இன்னொரு பெரியஅணி (61) டாங்கர்கள், பவல் வாகனங்கள் சகிதம் பறங்கியாறு, பாலியாறு என்பனவற்றைத்தாண்டி செட்டிகுளம் நட்டாங்கண்டலை நோக்கி நகரத்தொடங்கவும் உயிலங்குளம், துணுக்காய், ஆலங்குளம், பாண்டியன்குளம், சிவபுரம், இடதுகரை, யோகபுரம், மக்கள் நிலமை பொறியில் அகப்பட்டதைப் போலாயிற்று.
இவ்விருமுனைத்தாக்குதலை சமாளிக்கப் போதிய போராளிகள் இல்லாமல் திணறிய விடுதலைப்புலிகள் வன்னியின் எல்லா ஊர்களிலுமுள்ள வீடுகளிலுமிருந்து பதினைந்திலிருந்து முப்பது முப்பத்தைந்து அகவைகள் வரையிலான திருமணமாகாத ஆண்கள் அனைவரையும் மீண்டும் பிடித்துச்செல்ல ஆரம்பித்தனர். விடுதலைப்புலிகளையே தம்மீட்பர்களென நம்பி அவர்களுக்காக எதைவேண்டுமானாலும் செய்துகொண்டும், செய்வதற்குத் தயாராகவும் இருந்த இப்பகுதி மக்களுக்கு இதனால் இயக்கம் மீதான அதிருப்தி அதிகரித்தது.
>>>> 3
ஒரு மரந்தடிகூட அசையாமல் காற்றுவீசாமல் அந்தகாரமாயிருந்த ஒரு மாலைவேளையில் யோகபுரத்திலிருந்து இயக்கத்துக்குப்போன போராளிகள் அழகிரியும், மாதவனும் சீருடையில்லாமல் மிதியுந்துகளில் ஆத்துப்பறந்துவந்து அனைத்து வீட்டுப்படலைகளிலும் தட்டிச்சொன்னார்கள்:
“ நாச்சிக்குடா ,வெள்ளாங்குளத்திலிருந்து ஆமி உயிலங்குளம் துணுக்காய் ஒட்டன்குளம் நோக்கி ’றவுண்ட் அப் பண்றான். எல்லாரும் வெளிக்கிட்டு மாங்குளத்துக்குப்போங்கோ.”
சனங்களுக்கு திகைப்பாயும் கோபமாயும் இருந்தது. சரியான உணவுப்பண்டங்கள், மருந்து, எரிபொருள் விநியோகங்கள் இல்லாவிட்டாலும் லக்ஷக்கணக்கான மக்களின் சரணாலயமாயிருக்கும் வன்னிக்கும் ஆபத்தென்றால்…………………………….
வயசானவர்கள் அரசையும், இராணுவத்தையும் நொந்து சபித்தனர்.
“ இனி வன்னிக்கும் வெள்ளிடி என்றால் எங்கே நாங்கள் போறது? ”
“ எல்லாம் பிறகு பேசலாம், இப்போ நிண்டு கதைக்கவோ யோசிக்கவோ ஒண்டுக்கும் நேரம் இல்லை. உங்கள் உங்கள் உயிரைக்காக்க வேணுமெண்டால் முடிஞ்ச அளவில சாப்பிட இருக்கிற பண்டங்களை தானியங்களை பண்டபாத்திரங்களை உடுப்புக்களை எடுத்துக்கொண்டு கெதியில எல்லோரும் வெளிக்கிடுங்கோ. ”
மக்களோடு வன்னியைக் கைப்பற்றுவதுதான் இராணுவத்தின் நோக்கமாதலால் பின்னர் பெரிய அளவில் ஷெல்லுகள் எரிகுண்டுகள் அடிப்பதைக் குறைத்துக்கொண்டு படையினர் ஆயிரக்கணக்கில் முதலைகள்மாதிரி வீதிகளினூடாகவும் வயல்கள் காடு கரம்பைகளூடாகவும் ஊர்ந்து நகர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தனர். அரசு இப்போது சொல்வதுபோன்று அவர்கள் நகர்வைத்தடை பண்ணும் விதத்தில் பெரும் தடுப்பரண்களோ, நிலக்கண்ணிகளோ போராளிகள் பக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கவில்லை. அத்தனை பெரும்பரப்பில் கண்ணிகளை விதைப்பதென்பதுவும் இலேசான ஒரு விஷயமுமல்ல.
போராளிகளின் செறிவாக இருக்கக்கூடிய இடங்களையும், அவர்களின் ஊடாட்டங்களையும் இந்தியா சற்றலைட்டுகளின் மூலம் நுட்பமாகக் கவனித்து இலங்கை ராணுவத்துக்கு துல்லியத்தகவல்கள் தரவும் இராணுவம் ஏவிய எறிகணைகளும் ஷெல்களும் அவர்களின் பாசறைகளிலும் போராளிகள் மேலும் விழுந்து வெடித்ததன. அவர்களின் தளபதிகளுள்ளிட்ட போராளிகள் நூற்றுக்கணக்கில் காவுகொள்ளப்படவும் மனவுறுதிக்குப் பெயர்போன விடுதலைப் புலிகளுக்கே பெருந்திகைப்பு ஏற்படலாயிற்று. பின்வாங்குவதைத் தவிர வேறு மார்க்கங்கள் இருக்கவில்லை.
பொதுமக்களில் பலரும் “ நாங்கள் சரணடையிறோம் ஒரு இடத்துக்கும் இனி எங்களால போகேலாது ” என்றனர்.
“ சரணடஞ்சாலும் ஒண்டும் நடக்காது அத்தனைபேரையும் ஒண்டாய்போடுவான்.”
“ சரணடைஞ்ச ஆதிக்குடியாக்கள் நூறுபேரை பறையனாலங்குளம் உயிலங்குளத்தில ஆமி போட்டிட்டானாம்” என்றொரு கதை பரவவும் திகைத்துப்போய்ச் சனங்கள்
“ இட்டமுடன் எம் தலையில் இன்னபடி என்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டான் ’’
என்று சபித்தபடி வேறுவழியின்றிக் குடிகலைந்து வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினர்.
மல்லாவியில் ஜெகதீசனும் சிவபாதமும் ஒரு சிறிய பாரவுந்தை முல்லைத்தீவுவரை வாடகைக்குகேட்டபோது 20,000 ரூபா கேட்டார்கள். அதை அழைத்துவந்து தம்வீட்டின் முன்விறாந்தையையும் கூடத்தையும் பிரித்து கூரைமரங்களையும், தகரங்களையும் ஓடுகளையும் கொட்டில் போடக்கூடிய மாதிரிச்சில தடி தண்டுகளையும் சேகரித்துப் அப்பாரவுந்தில் ஏற்றினார்கள். இன்னும் வீட்டிலிருந்த சமையல் பாத்திரங்கள், வாளி, குடம், கம்பிஅடுப்பு, கத்தி கோடரி பாய் தலையணை என்று ஏற்றிக்கொண்டு தங்களதும் ஜெகதீசனின் சகோதரன் கருணாநிதி மனைவி குழந்தைகள், அயல்வீட்டுக்கோகிலத்தோடு இன்னும் இரண்டொருவரையும் ஏற்றிக்கொண்டு யோகபுரத்திலிருந்து முதலில் முல்லைத்தீவு நோக்கிப்புறப்பட்டார்கள். தண்ணீரூற்றிலும், முள்ளியவளையிலும் அவர்களுக்குச் சில உறவினர்கள் இருந்தார்கள்.
>>> 4
தென்வன்னியில் தம்மீது விடுதலிப்புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுக்காததைக் கண்ட இராணுவம் சுனாவிலிலிருந்தும் ஜெயபுரத்திலிருந்தும் நகர்ந்து நகர்ந்து அக்கராயன்குளம், குமரபுரம், உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், பரந்தன், கிளிநொச்சியிலிருந்தும் மக்களைக் விரட்ட அவர்கள் கிழக்காக தருமபுரம், உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு நோக்கி ஏ35 பாதையில் நகர ஆரம்பித்தனர்.
‘இராணுவம் பரந்தனைச் சூழ்ந்தாயிற்று. இன்னும் இரண்டே நாட்களில் கிளிநொச்சியும் விழுந்துவிடும்’ என்று ஜனாதிபதி பிரகடனஞ்செய்யவும் மக்கள் உறைந்து போயினர். இவ்விடப் பெயர்வில் பொதுமக்களைவிடவும் வியாபாரிகளுக்குத்தான் திண்டாட்டம் அதிகம். எந்தப்பொருளை விடுவது எதனை எடுத்துச்செல்வது ? உழவு இயந்திரங்களையும் பாரவுந்துகளையும் துணைகொண்டு முடிந்த அளவில் தத்தமது பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரிகளும் ஜனசமுத்திரத்துடன் கலந்து கிழக்கே முன்னேறத்தொடங்கினர். வன்னிப்பிராந்தியத்தினுள் அதுவும் கிளிநொச்சியுள் இலகுவில் இலங்கை ராணுவம் நுழைந்துவிடமுடியாதென்று தெம்புடனிருந்த மக்களுக்கு நாச்சிக்குடாவின் வீழ்ச்சியும் அதைத்தொடர்ந்தான ராணுவத்தின் நகர்வுகளும் அதிர்ச்சியளிப்பதாகவும் ஜீரணிக்கக் கஷ்டமானதாகவும் இருந்தது.
கிளிநொச்சிமாவட்டத்திலிருந்து தருமபுரம், விசுவமடு முத்தையன்கட்டு, உடையார்கட்டுப்பகுதிக்கு ஒரு இலக்ஷம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக வானொலிச்செய்திகள் சொல்லின.
சனங்கள் அனைவரும் வெளியேறிய பின்னால் ஜனாதிபதி அறிவித்தபடி ஆயிரமாயிரம் போராளிகளின் இழப்பில் கைப்பற்றிய கிளிநொச்சியையும் ஆனையிறவையும் இராணுவம் தேனீக்கள் பறந்துவிட்ட தேன்கூட்டைப்பற்றுவதுபோல் பற்றிச் சுவைத்துக் கொண்டாடியது.
இப்போது பரந்தன், கிளிநொச்சியிலிருந்து இராணுவம் எறிகணைகளையும் ஷெல்லுகளையும் உடையார்கட்டு, தருமபுரம், விசுவமடு , திருவையாறு, முத்தையன்கட்டுப் பகுதிகளுக்கு ஏவ ஆரம்பித்தது. காட்டிலும் றோட்டிலும், வாய்க்கால் வரப்புகளிலும், தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்துகொண்டிருந்தனர். எங்கும் தீயும் புகையும் அவலமும் கூக்குரலும் கேட்ட படியிருந்தன.
மக்கள் கையும் காலும் அறுந்து துடித்து விழும் வீடியோப்படக்காட்சிகள் ஐரோப்பிய கனடிய தமிழ்தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படவும் உணர்சிவசப்பட்டுத் தமிழ்மக்கள் புலம்பெயர் நாடுகளின் வீதிகளிலும் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர். ஐ.நாவும், பஞ்சசீலபரிபாலனர்களும், மனித உரிமைகள் இயக்கங்களும் பார்த்துக்கொண்டிருக்க தினமும் கொலைப்படலம் தொடர்ந்தது. ஆனாலும் இலங்கை அரசு ஐ.நாவின் தொடர்ந்த நச்சரிப்பில் லேசாகமுனகிக்கொண்டு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ஆனந்தபுரத்தை மக்களுக்கான ‘பாதுகாப்புப்பிரதேசம்’ (No War Zone) என அறிவித்தது.
>>> 5
யோகபுரம் மூன்றாம் யூனிட் மக்களில் இளையவர்களோ முதியவர்களோ நடக்கக்கூடியவர்களைத்தவிர தாமாக இயங்கமுடியாதபடி இருந்த நோயாளிகளும் மிகவயசானவர்களும் பெரும்பிரச்சனையானார்கள். அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. பாபுலுக்கிழவன் “எனக்கு எழுபத்தைந்து வயசாச்சு என்னால ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது நான் இங்கேதான் கிடப்பேன் வாற ஆமிக்காரன் என்னைச் சுடுகிறதெண்டால் சுட்டுவிட்டுப்போகட்டும்” என்று அடம்பிடித்தார். கட்டிலோடு கட்டிலாக எழுந்து நடமாடமுடியாதபடி இருந்த முன்னாள் போராளி இளமதி இப்போ இந்நாள் போராளிகளுக்கு பிரச்சனையாக இருந்தான்.
அவர்கள் எடுப்பு அலையாடல் கருவிகளில் உரையாடவும் சற்றுநேரத்தில் ஒரு உழவு இயந்திரம் வந்தது. இருவரையும் குண்டுக்கட்டாகத்தூக்கி அதன் பெட்டியினுள் ஏற்றினார்கள். இருவரும் “எங்களை இங்கேயே கிடந்து சாகவிடுங்கோ” என்று அவர்களைக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் எங்களை மன்னிக்கவேணும். ஒருவரையும் வீட்டில் இருக்கவிடப்படாதென்பது மேலிடத்து உத்தரவு.” அன்பாகச் சொன்னாலும் அவர்கள் தம்முடிவிலும் செயலிலும் உறுதியாகவே இருந்தார்கள். இவர்களின் கெஞ்சல்கள் மன்றாட்டங்கள் எதுவும் அவர்களிடம் எடுபடவில்லை. இன்னும் எவராவது தப்பி ஒட்டி இருக்கிறார்களா என்பதைப் போராளிகள் ஒவ்வொரு வீடாகச்சென்று பார்த்து உறுதிசெய்தனர்.
மரச்சட்டங்களால் ஒரு ஸ்டிறெச்சர் செய்து இளமதி அதிலேயே கிடந்தமானத்துக்கு உழவு இயந்திரப்பெட்டியில் ஏற்றப்பட்டிருந்தான். போகுமிடத்தில் பதுங்குகுழிகள் தோண்டவேண்டியிருக்கும் என்கிறகணிப்பில் மக்கள் பலரும் தங்களிடமிருந்த மண்வெட்டிகள் பிக்காஸ்களையும் எடுத்துக் கொண்டனர். கொட்டில்களில் ஆண்டுக்கணக்காக பாவனையின்றி நின்ற பல மாட்டுவண்டிகள் மாடுகளுடனும் இல்லாமல் கை இழுவையாகவும் வீதியில் நகரத்தொடங்கின. துணுக்காய் மாங்குளம் வீதி நாற்பது வருஷங்களாக பராமரிக்கப்படாது குன்றுங்குழியுமாக இருக்கிறது. இன்னும் யோகபுரத்தின் முதலாம் இரண்டாம் மூன்றாம் நாலாம் ஐந்தாம் யூனிட்டின் உள்குறுக்கு வீதிகள் அனைத்தும் இன்னும் தார் கண்டறியாத கிரவல் மண்வீதிகளே. இழுத்துவரப்பட்ட வண்டிகள் மேடும் பள்ளமுமான கிரவல் வீதிகளில் உருளும்போது எழுப்பிய ‘நற நற’ச் சத்தம் பற்களைக்கூசவைத்தன.
ஒவ்வொரு ஷெல் வெடிக்கும்போதும் அதன் சத்தத்திலிருந்து அது எவ்வளவு தொலைவில் ஏவப்படுகிறது ராணுவம் எவ்வளவு தூரத்திலிருக்கிறான் என்பதைத்துணிய இப்போது மக்களும் பழகிவிட்டிருந்தனர்.
யோகபுரம் மூன்றாம் யூனிட்டி ல் வேலுப்பிள்ளையர், சபாபதியர், செல்வநாயகம் எனும் மூன்றுபேரது உழவு இயந்திரங்களே டீசலோடும் ஓடக்கூடிய நிலையிலும் இருந்தன. ஒவ்வொரு உழவு இயந்திரங்களினதும் பெட்டிகளில் விரிக்கப்பட்ட படங்குகளிலும் சக்கரங்களின் மட்காட்களிலுமாக வண்டிக்கு சராசரி நாற்பது பேர் ஏற்றப்பட்டனர். வேலுப்பிள்ளையர் பெண்சாதி பார்வதி வன்னிவிளாங்குளம் பொங்கலுக்கென்று நேர்ந்து விளையவிட்டிருந்த பூசனிக்காய்கள் இரண்டையும் வெட்டி எதுக்கும் உதவுமென்று தங்கள் உழவுஇயந்திரத்தின் பெட்டிக்குள் போட்டார். ஒருவாறு எல்லோரும் புறப்பட ஆயுத்தமாகையில் நடுப் பெட்டிக்குள் இருந்தபடி சாத்திரியார் கதிரேசர் :
“ எம ஓரையடா பிள்ளையள், ஒரு அரைமணத்தியாலம் பொறுங்கோ. ” என்றார்.
“ எமஓரையும் கிமஓரையும் ஷெல்லுகள் மல்லாவி ஆஸுப்பத்தரிகாண வந்து வந்து விழுகுதாம். இஞ்சவர இன்னும் நேரம் கனக்க எடுக்காது ” என்று அவசரப்படுத்தினான் சாந்தன்.
“ நல்லதுக்கு குடுத்திக்காலமில்லை………… என்னவோ உங்களுக்குத் தெரிஞ்சபடி செய்யுங்கோ ராசாவை.”
வெத்திலைத்தம்பர் கேட்டார் :
“ சாத்திரியாருக்கு ஊர் எங்கே ஏழாலை, மல்லாகப்பக்கமோ ?”
“ எப்பிடித்தெரிஞ்சுதோ ?”
“ அவைதான் உந்த ‘குடுத்தி’ பாவிக்கிறவை ”
“ ஆமோ…………….. அதெல்லாஞ்சரிதான். ஆனா இந்தப்புறப்பாடு ஒன்றும் நல்லதுக்கு மாதிரித்தெரியேல்லை ” பெருமூச்செறிந்தார்.
கோப்பாய்க் கமலா அக்கா மேசன் வேலைக்குப்போன இடத்தில் தனது மகன் சண்முகத்தை உடுத்துறை வேலுப்பிள்ளையர் மனுஷி பாக்கியம் தன்ரை விளைஞ்ச குமரைக்காட்டி மயக்கி வளைச்சுப் பிடிச்சுப் போட்டாவென்று அந்தக் குடும்பத்தோடு இப்போ பத்துப்பன்னிரண்டு வருஷங்களாகப் பேச்சல் பறைச்சல் இல்லை. மிளகாய்கன்றுகளுக்கான மேட்டுநில நீர்ப்பாசனத்தின்போது அம்பலவாணர் வீட்டுக்காரருக்கும் கந்தவனம் குடும்பத்துக்கும் பாசன நீர்ப்பங்கீட்டில் ஏற்பட்ட சச்சரவு கைகலப்பாகிப்போனதால் அந்த இரண்டு குடும்பங்களும் ஆண்டுக்கணக்கில் சங்காத்தமில்லை. இப்படி அங்கங்கே அயலவைக்குள்ளே பிக்கல்பிடுங்கல்கள் இருக்கிறதும் சகஜம்தானே.
‘ இனி உள்ளது வாழ்வா சாவா ’ என்று ஒருவருக்கும் தெரியாத நிலையில் மூன்றாம் யூனிட்டில் ஒன்றுடனொன்று பெரிதும் சௌஜன்யமாயிராத குடும்பங்கள் எல்லாம் ஒருவரோடொருவர் இவ்விடப்பெயர்வுடன் என்றுமில்லாத அளவுக்கு அந்நியோன்யமாகினர்.
யோகபுரம். சிவபுரம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல் பகுதிகளில் குடியேற்றத்திட்டங்களில் இருந்த மக்கள்—
1995 சூரியக்கதிர்தாக்குதல்/படையெடுப்பின்போது குடாநாட்டை விட்டுவந்த மக்கள்—
வன்னியின் ஆதிக்குடிகளுமாக—
கிழக்கு வன்னியில் வாழ்ந்திருந்த அனைத்து மக்களும் கையில் எடுக்கக்கூடிய அளவுக்குத் தானியங்கள் சாக்கு பாய் கைலாந்தர் அன்ன பொருட்களோடு வீதிகளில் போராளிகளினதும் அவர்களின் அனுசரணையாளர்களினதும் முன்நடத்தலில் மாங்குளத்தின் திசையில் கிழக்காக நடக்கத்தொடங்கினார்கள். சரித்திரம் அறிந்திராத அவ்விடப்பெயர்வுத்தொடரில் மக்களுடன் சேர்ந்து பத்துப்பன்னிரண்டு உழவு இயந்திரங்களும், எழுபது எண்பது மாட்டுவண்டிகளும் எண்ணிக்கையிலடங்காத மிதியுந்துகளும் வந்துகொண்டிருந்தன. இழுவை மாடுகள் கிடையாதவிடத்து மக்களில் சிலர் வண்டிகளை கைகளாலேயே தள்ளிக்கொண்டு சென்றனர். ஏனைய உழவுஇயந்திரங்களில் இளமதியைப்போல ஸ்டிறெச்சரினுள் ஏற்றப்பட்ட வேறும் சில உடம்புக்குமுடியாத நோயாளிகளும், முதியவர்களும், குழந்தைகளும், அணுக்கத்தில் பிரசவித்த தாய்மார்களும் இருந்தனர். இன்னும் அவற்றில் ஒவ்வொரு வீட்டுக்காரரினதும் அரிசி கிழங்கு காய்கறிகளடங்கிய சிறுசிறு உரப்பைகளை வைத்துக்கொண்டுவர அனுமதித்தனர். போதாத அவலத்துக்கு எங்கிருந்து ஏவுகிறார்களென்று அனுமானிக்க முடியாதபடி சில எறிகணைகள் இஷுக் இஷுக் என்று அவர்கள் தலைக்குமேலால் சென்றுகொண்டிருந்தன.
வன்னிப்பகுதிக்கான உணவு மருந்துப்பொருட்களோடு எரிபொருள் விநியோகத்தையும் அரசு மட்டுப்படுத்தியதால் அறவே பெற்றோல் டீசல் இல்லையென்றானது. சிலர் திருட்டுத்தனமாக இராணுவத்திடம் லிட்டர் நானூறுக்கும் ஐநூறுக்கும் வாங்கிய டீசலை கொஞ்சமாக ஒளித்து வைத்திருந்தனர். இயங்கக்கூடிய சில உழவுஇயந்திரங்களும் டீசல் இல்லாமையால் கொட்டில்களிலேயே கிடக்கவிடப்பட்டன.
மூன்றாம் யூனிட்டிலிருந்து புறப்பட்ட உழவு இயந்திரங்களில் வந்துகொண்டிருந்த பொன்னம்பலம் , கருணாநிதி, மரியதாஸன் , சம்பந்தன்போன்ற இளைஞர்களும் ஓரளவு சுகதேகிகளும் வவுனிக்குளம் சந்தியில் இறங்கிக்கொண்டு நடப்பதற்குச் சிரமப்பட்ட சில பெண்களையும் முதியவர்களையும் ஏற்றிக்கொண்டனர்.
இடம்பெயரும் இஜ்ஜனசமுத்திரத்தில் கணிசமான அளவில் போராளிகளும் இருக்கத்தானே வேண்டுமென கணிப்பில் இராணுவம் வீதியில் சென்றுகொண்டிருந்த சனங்கள் மீதும் தொடர்ந்து ஷெல்களை வீசித்தன் கைவரிசையைக்காட்டிக் கொண்டிருக்கவும் சிலர் காடுகளில் இறங்கி நடக்கவும் முயற்சித்தனர். ‘ஜிவ்’வென்று கூவிக்கொண்டு மிகப்பதிவாக சில ஷெல்கள் வரவும் சனங்கள் “அறுதலிபிள்ளையள் ஷெல்லடிக்கிறாங்கள்டா எல்லாரும் கீழ கிடவுங்கோ, கிட கிட கிட.” என்று கூச்சலோடு அவை அணிஞ்சியன்குளத்திலும் ஒட்டறுத்தகுளத்திலும் இடம்பெயர் அணியின் மேல் விழுந்து வெடித்ததன. சனங்கள் ‘ஓ’ வென்றுபோட்ட கூச்சல் நெடுநேரத்துக்குக் கேட்டது. விழுந்து வெடித்த இரண்டு ஷெல்களும் ஒவ்வொரு இடத்திலும் தலா ஒவ்வொரு உயிரைக் காவுகொண்டன. அணிஞ்சியன்குளத்தில் ஒரு பன்னிரண்டுவயசுப்பையன். ஒட்டறுத்தகுளத்தில் ஒரு நாற்பது வயது குடும்பஸ்தர். நின்று பார்த்து ஒன்றுமாகாது. பந்தங்கள் பதறிக்கூச்சலிட்டுக்கொண்டிருக்க சீறிய குருதியின் வெம்மை தணியமுன்னரே வீதியோரமாக அடக்கம் செய்துவிட்டு மேலே நகர்ந்தது கூட்டம்.
நீண்ட இந்த மனிதஅணியின்மீது மீண்டும் மீண்டும் அங்கும் இங்குமாக ஷெல்கள் வந்து விழுந்தபடியிருந்தன. ஷெல்லின் சிதைவுகள்பட்டு விரல்கள் அறுந்தவர்கள் விலாவில் சிராய்த்தவர்கள் கையிலோ கால்களிலோ தசைகள் பிடுங்குப்பட்டவர்களை இழுத்துவந்த வண்டிகளிலும், உழவு இயந்திரத்தின் பெட்டிகளிலும் முதலிடம் கொடுத்து ஏற்றினர். பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தனை உற்பாதங்களிருந்தும் இராணுவம் வருவதற்குள் மக்கள் எப்படியோ முன்னேறிச் சென்றுவிட்டார்கள்.
முதலில்போன உழவுஇயந்திரங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வன்னி விளாங்குளத்தை அடையவே அந்திசாய்ந்து இருட்டத்தொடங்கியது. ஷெல்களின் வீழ்ச்சியும் சற்றுத்தணிவது போலிருந்தது. எதுக்காக எங்கே போய்கொண்டிருக்கிறோமென்று தெரியாத குழந்தைகள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தன. அனைவருக்கும் தாங்கமுடியாத பசியும் தாகமும். தண்ணீர் மொள்ளவும் தாகந்தீர்க்கவும் அம்மன் கோவில் கிணத்தில் நீண்ட நிரையுண்டானது. அம்மன்கோவில் பொங்கலின்போது கூடுவதைவிடவும் நிறைந்த சனக்கூட்டம் ஆங்காங்கு அடுப்புகள் மூட்டி பானைகளையும் முட்டிகளையும் வைத்துக்கொண்டு கையில் எடுத்துவந்த தானியங்களை வைத்து ஏதேதோ பண்ணினர். முதலில் வெந்த பானையிலிருந்து குழந்தைகளுக்கு சாதங்கள் ஊட்டப்பட்டன. களைத்துப்போயிருந்த ஜனங்கள் அங்கங்கே துவண்டு படுத்தன. அவர்கள் தம் கால்வலி, தலைவலி, வயிற்றுவலி அன்ன உடல் உபாதைகளையெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கப் பழகலாயினர். மறுநாள் விடிகாலையிலேயே பயணம் ஆரம்பமாகியது.
<<< 6
இவ்வேளை முல்லைத்தீவில் பெருந்தொகையில் கடற்படையும் இராணுவமும் வந்திறங்கத் தொடங்கியது. அனைவரையும் விடுதலைப்புலிகள் மூர்க்கமாக எதிர்த்துப் பார்த்தனர். ஆனாலும் அவர்கள் கடலில் இருந்து ஏவியகணைகளையும் பீரங்கியையும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இவர்கள் நாலுபடகில் புறப்பட்டால் கடற்படை நாற்பது டோறாக்களிலும் மிகைவேகங்கொண்ட பெரும்படகுகளிலும் வந்து தாக்கியது. முல்லையும் அவர்கள் வசமாகிவிட்டதென்று வானொலியில் செய்திகள் வந்தன. புலியினரின் எதிர்ப்பொன்றும் பெரிதாக இருக்கவில்லை என்பதை வானொலி மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டிருந்தது. மக்கள்நிரை ஒட்டிசுட்டானை நெருங்கும்போது முல்லைத்தீவு முற்றாக அவர்கள் வசமானது உறுதியானது. இனி அங்கு போவது அத்தனை உசிதமல்ல.
முல்லைத்தீவுக்குத்தான் போகமுடியாவிட்டாலும் முள்ளியவளை தண்ணீரூற்றிலுள்ள உறவுகளுடனாவது தங்கலாமென்று வந்த ஜெகதீசனுக்கும் சிவபாதத்துக்கும் சப்தநாடிகளும் ஒடுங்கி மேற்கொண்டு என்னசெய்வதென்று தெரியவில்லை. யோகபுரத்துக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இடவசதிகள் ஏற்பத்திக்கொடுத்த தாமே தம் வீட்டையும் பிடுங்கிக்கொண்டு புறப்படவேண்டியாகிவிட்ட அவலத்தை நினைத்தான்.
கருணாநிதியின் மனைவி கமலம் பாரவுந்தில் தங்களுடன்கூட அவனையும் வருமாறு எவ்வளவோ வற்புறுத்திக்கேட்டும் ’தான் சனங்களோடதான் வருவேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான் அச்சமூபகாரி.
அவன் மகள் ஆதர்ஷா பாரவுந்துள் பயணம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தாள்
“ ஏனம்மா அப்பா எங்களோட வரேல்லை?”
“ இப்போ நாங்கள் எங்கே போறம் அம்மா?”
“ ஏன் ஆமி எங்களைத் தொரத்துது…………. எங்கே தொரத்துது? ”
“ அம்மா நீ அழுவாதை, நான் இனி ஒண்டுங்கேட்க மாட்டன்.”
ஒட்டிசுட்டானில் புதுக்குடியிருப்பு சந்திக்கு அணுக்கமாக பாரவுந்துக்காரன் ‘இனிப்போகேலாது’ என்றுவிட்டு அவர்களது பொருட்களை வீதியோரமாக இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டான். அவனையும் குறைசொல்ல முடியாது அவனும் உயிர்பிழைக்கத்தானே பார்ப்பான்.
அனைவருக்கும் அகோரப்பசி. இருந்த பண்டங்களைக்கொண்டு சில சுள்ளிகளைச்சேகரித்து அடுப்புமூட்டி சமையல் என்று சொல்லி ஒன்றைப்பண்ணிச் சாப்பிட்டுவிட்டு அத்தனை பொருட்களையும் வீதியிலேயே கிடக்கவிட்டுவிட்டு ஒட்டுசுட்டான் பாதையில் இருவரது குடும்பமும் சனமோடு சனமாக கையில் சில அலுமினியப்பாத்திரங்களையும் இரண்டு கோணிப்பைகளையும் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினர்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் டேவிட் ஐயாவின் வழிநடத்தலில் காந்தீய இயக்கம் என்னும் சமூகமேம்பாட்டு அமைப்பொன்று கட்டமைக்கப்பட்டது. இனக்கலவரங்களால் சிங்களப்பகுதியை விட்டுவெளியேறிய தமிழ்பேசும் அகதிமக்களை வடக்கு–கிழக்கு பிரதேசத்தில் குடியேற்றி அவர்களுக்கான சமூகப்பதுகாப்பை உறுதிசெய்வது– தமிழ்மக்களின் உரிமைப்போரட்டத்தை, பாட்டாளியின மக்களின் வர்க்கப்போராட்டதை வழிநடத்த மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்குவது– சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளை இணைப்பது– எனப்பல இலக்ஷியங்கள் அவர்களிடமிருந்தன. யோகபுரத்திலிருந்து கருணாநிதி, குலசிங்கம், பொன்னம்பலம், செல்வரத்தினம், நவரத்தினம், அசோக், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீகாந்தன், பவான், மைக்கேல், மரியதாஸன், அரியநாயகம், சாந்தன், காசிநாதன், ஆகிய சமூக உணர்வுள்ள பதினைந்து இளைஞர்கள் காந்திய இயக்கத்தில் ஒன்றிணைந்தனர். யோகபுரம் சனசமூகநிலையம் இரவுவேளைகளில் அவர்கள் தமது கலந்தாசோனைகள் செய்யும் சந்திப்பு நிலையமுமாயிற்று.
மக்களைச் சந்தித்து அவர்களுடன் சமூகச்சீர்திருத்தங்களின் அவசியம் பற்றிப்பேசுதல், நாடகங்கள், வீதிநாடகங்கள் மூலம் சமூகசீர்திருத்தக் கருத்துக்களைப்பரப்புதல், நீர்ப்பாசன வாய்க்கால்களில் வளர்ந்திருந்த சிறு மரஞ்செடிகொடிகளை வெட்டித்துப்புரவு செய்து நீர் சுமுகமாக ஓட வழிசெய்தல், பொதுச்சிரமதானப்பணிகள் மூலம் தாரிடப்படாத கிராமத்தின் வீதிகளைக் கிரவல் போட்டுச்செப்பனிடுவது எனப்பல சமூகப்பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள் இவ்விளைஞர்கள்.
கிராமத்தின் படித்த பெண்களுக்கு மருத்துவத்தாதிப்பயிற்சிகள் வழங்கி கிராமமருத்துசேவையிலும், பாலர்நிலை ஆசிரியப்பயிற்சிகள் வழங்கி பல பாலர்பாடசாலைகளை நடத்தினர். இன்னும் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து இயங்கி இனவாதத்தை அறவே அழித்து இலங்கையில் அரசியல் சமத்துவத்தை உருவாக்கவேண்டும் என்பதுபோன்ற கனவுகளும் அவர்களுக்கு இருந்தன.
பின்னர் சந்திரிகா அம்மையாரின் அரசு சூரியக்கதிர் எனப்பெயரிட்டு யாழ்ப்பாணத்தில் தாக்குதல் தொடுத்தபோது குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வன்னிநாடி வந்த மக்களுக்கு கொட்டில்மனைகள் அமைத்துக்கொடுத்தல் அங்கங்கு குழிகள் வெட்டி கழிப்பறைகளை அமைத்துக்கொடுத்தல் என மும்முரமாகப் பொதுப்பணிகள் செய்து கொடுத்தவர்கள் இவ்விளைஞர்கள். ஒவ்வொரு குடியேற்றக்காரர்களும் தத்தம் வளவுகளுள் நாலைந்து குடும்பங்கள் கொட்டில்களோ ஒத்தாப்புகளோ போட்டு ஒரு முட்டியை வைத்துக்கொண்டு பிழைத்திருக்க இடம்கொடுத்த கிராமம் யோகபுரம்.
எல்லோரும் இளைஞர்களானதால் அவர்களுள்ளும் விடுதலைப்புலிகளின் அனுசரணையாளர்கள், எதிர்ப்பாளர்கள் விமர்சகர்கள் எனப்பலரும் வெவ்வேறு பார்வைகளுடன் இருக்கவே செய்தனர். காந்தீய இயக்கம் விடுதலைப்புலிகளுக்கான பிரச்சார வேலைகளைத்தான் செய்கிறதோ என்கிற சந்தேகத்தில் அரசாங்கம் இத்துடிப்பான இளைஞர்கள் அத்தனை பேரையும் கைதுசெய்து ஆறுமாதங்கள் சிறையிலும் அடைத்தது.
சம்பந்தனும் ஜெகதீசனும் சிவபாதமும் பிறிதொரு இயக்கத்துக்காக நின்று உழைத்தவர்கள். அவ்வியக்கம் முடக்கப்பட்டவுடன் ஏனைய இளைஞர்களைப்போல விடுதலைப்புலிகளுடன் இணைந்து இயங்க முடியவில்லை, அவர்களின் அனுதாபிகளாகவும் விமர்சகர்களாகவுமே இருந்தார்கள்.
>>> 7
முல்லைத்தீவை இராணுவம் கைப்பற்றியானதும் கால்நடையாக வந்த சனம் மாங்குளம்போகாமல் வீதியைக்குறுக்கறுத்து காட்டுக்கூடாக பனிக்கங்குளம் கொக்காவில் திசையில் நடக்க ஆரம்பித்தது. சில இடங்களில் வயல்களில் வெள்ளம் நின்றது. சேறு சகதியும் சுமுகமாக நடக்கவிடாது துன்பம் செய்ததன. நாயுருவியும், தொட்டாற்சுருங்கியும் பிராண்டியதில் சனங்களுக்கு கைகாலெல்லாம் கீறலும் வலியும். அவர்களாலும் ஒரு பகல்பூரா நடந்ததில் இரணைமடு முத்தையன்கட்டுக்கே வரமுடிந்தது. மேடும் பள்ளங்களும் நிறைந்த காட்டுவழியிப்பாதைகளினூடாக வண்டிகளை உருட்டிச்செல்வது சிரமமாதலால் முதியவர்களை ஏற்றிய வண்டிக்காரர் ஒலுவமடுவரை தள்ளிச்சென்று அங்கிருந்து மேற்காக வண்டிப்பாதையில் விசுவமடுநோக்கிச்சென்றனர். பசியும் களைப்பும் காலோய்ச்சலும் சனங்களுக்கு அடுத்து எங்கே போவதென்று தெரியவில்லை. இப்போது கருணாநிதி ராஜினாமா நாடகங்களுக்கு வேஷங்கள் போடத்தொடங்கவும் அதைநம்பிய வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓடோடி வந்து அவரைச்சந்தித்து சமாதானம் பண்ணுகிறார்.
அநேகமான உழவுஇயந்திரங்களும் ஒட்டுசுட்டான் பாதையையே தேர்ந்தெடுத்தன. முதலில் சென்ற இயந்திரங்கள் உடையார்கட்டில் புதுக்குடியிருப்பில் ஆங்காங்கே சனங்களை இறக்கிவிட்டன. யோகபுரத்து இளைஞர்கள் டீசல் உள்ள உழவுஇயந்திரக்காரர்களை ’வாங்கிறகாசை வாங்குங்கோ தயவுசெய்து திரும்பிப்போய் வண்டிகளில் வந்துகொண்டிருக்கிற உடம்புக்கு இயலாதவர்களை ஏற்றிவாங்கோ’ என்று கெஞ்சியதில் இரக்க குணமுள்ள உழவுஇயந்திரக்காரர்கள் சிலர் திரும்பிவந்து அவர்களை ஏற்றிக்கொண்டு வரவும் செய்தனர்.
வேலுப்பிள்ளையரின் உழவுஇயந்திரப்பெட்டிக்குள் இருந்த சின்னம்மா ஆச்சி எந்நேரமும் பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருந்தார். அவரது மருத்துவத்தாதி பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்த மகள் பாகேஸ்வரியை விடுதலைப்புலிகள் தமக்கான மருத்துவமனையில் பணிசெய்வதற்காக அழைத்துப்போயிருந்தனர். ‘அதன்பிறகும் இரண்டொருதரம் வீட்டுக்கு வந்துபோயிருக்கிறாள், ஆனால் இப்போ ஆறுமாதமாக அவள் வரவுமில்லை ஒரு தொடர்புமில்லாமலுமிருக்கிறாள்’ என்று இவர் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்.
சீருடையில் போராளிகளை எங்கே பார்த்தாலும் “ ராசா எங்கட பாகேஸ்வரியைப் பார்த்தியளா மோனை நேர்ஸு. அவளை ஒருக்கா வந்து என்னைவந்து பார்த்திட்டுப்போகச்சொல்லுங்க ராசா, ஒருக்கா வந்துபாத்திட்டுப் பிறகு அவள் எத்தினை நாளைக்கெண்டாலும் உங்களோடை அங்கே நிக்கட்டும்.” என்று அரற்றுவார்.
“ முன்னொருக்கால் சுனாமி எண்டு புதுப்பேரோட ஒண்டு வந்து அள்ளிக்கொண்டு போச்சுது சனங்களை…………….. இப்போ இந்தப்போர் இடியேறு வந்ததாலை மனுஷனே மனுஷனைக் கொல்லுறான். புத்தனுடைய சிலைகள் பரவின அளவுக்கு அவன் போதனைகள் பரவவில்லையே நாட்டில. இட்டமுடன் எம்தலையில் இன்னபடி என்றெழுதி விட்ட சிவன் செத்துவிட்டானோ ” என்று புலம்பினார் சின்னத்தம்பிகிழவன்.
செல்வநாயகத்தார் சொன்னார் : “ இவங்கள் தங்களாலை ஏலாதெண்டால் சர்வதேச சமூகத்தைக்கூப்பிட்டு இனி நாங்கள் சமாதானமாய் போறம்……….. நீங்கள் தாற எதையென்றாலும் கெதியாய்த்தந்துதொலையுங்கோ என்று சொல்லவேண்டியதுதானே…… ஏன் இப்பிடிச் சனங்களைத்தெருவிலும் காட்டிலுமா உத்தரிக்க விட்டு அதுகளின்ரை பழியையும் தலையில் அள்ளிக்கட்டுறாங்கள். இறுதியுத்தம் ஆயுதம் வாங்கவேணுமென்று வெளிநாட்டுச்சனத்திட்ட வறுகினது போதாதென்று எங்களிட்டயுமல்லே அள்ளினவங்கள் . அப்ப வாங்கின ஆயுதங்களை எடுத்துவைச்சு ஆமியைத் திருப்பி விரட்டவேண்டியதுதானே? ”
“ அப்பிடியில்லை நாயகத்தார். நமக்கு ஆயுதங்கள் வந்த கப்பலுகளை இந்தியாவும் அமெரிக்காவும் மூழ்கடிச்சுப்போட்டாங்கள்லே. அதோட ஆயுதங்கள் மட்டுமில்லை. போராடுகிறதுக்கு போராளிகளும் வேணும். எங்களுடைய சுதந்திரத்துக்காகத்தான் அவங்களும் ஊணுறக்கமில்லாமல் காடுகரம்பையென்று அலைந்தும் தங்களின் உயிரைக்கொடுத்தும் போராடுறாங்கள். அதைத்தான் எல்லாரும் கண்கொண்டு பார்க்கிறம். இன்னும் இருக்கிற குறைநிறையை போதாமையை எப்படி நாம நிவர்த்திக்கலாமென்று சிந்திக்கவேணுமேயொழிய சும்மா ஒரு பக்கத்தால தட்டையாய் சிந்திக்கிறதாலயும் பேசுறதாலயும் பிரயோசனமில்லை.’’ பொன்னம்பலம் சொன்னான்.
செல்வநாயகம் ஒருநேரம் யோகபுரம் கிராமசபைத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவில் சுயேச்சையாய்ப் போட்டியிட்டு மண்கவ்வினவர். அவரின் உழவு இயந்திரத்தில் வரவேண்டி இருந்ததால் அதற்கும்மேல் அவருடன் விவாதிக்க வேறுயாரும் முனையவில்லை. ‘போராளிகளின் காதில் விழுந்தால் உதைபடுவார்’ என்று மட்டும் நினைத்தனர்.
இளமதி ‘இந்த உற்பாதங்களை எல்லாம் காணாமல் அப்பா செத்துப்போனதுதான் நல்லது’ என்று நினைத்தான். அவனது அப்பா அழகசிங்கமும் நெடுங்காலமாக இயக்கத்துக்குத் தேவையான பொறியியல் உதவிகள் மருத்துவமனை ஆயுதக்கிட்டங்கிகள் பாதுகாப்பு அரண்கள் அன்ன விஷேச பாதுகாப்பு பங்கர்களின் கட்டுமானப்பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவந்தார். அந்நேரத்தில் அவருடைய குருதியில் கொழுப்பின் அளவு அபரிமிதமாக ஏறிக்கொண்டிருந்தது. போர்க்காலச் சூழலில் அதைக் கவனிக்கவோ தணிப்பதற்கான வைத்திய உதவிகளைப்பெறவோ முடியாமல் போனதில் திடீரென ஒருநாள் வந்த மாரடைப்பு அவருக்கு மரணத்தையும் கொண்டு வந்தது. ‘இப்போது அவரும் இருந்திருந்தால் மனசு மிகக் கஷ்டப்பட்டிருப்பார்’ என அவன் நினைத்துக்கொண்டான்.
கருணாநிதி மட்டும் விடாமல் சாத்திரியாரைச் சீண்டிக்கொண்டிருந்தான்.
“ சாத்திரியாரே இத்தனை மனித அவலம் எதனாலை வந்தது. எந்தத் தோஷக் கிரகம் பார்த்ததுங்கோ……….புதுசா வால்வெள்ளி ஏதும் முளைச்சதால இப்படியாகுதா, இதுக்கு உங்கள் சாஸ்திரம் என்னங்கோ சொல்லுது?”
<<< 8
முதலில் முல்லைத்தீவுக்கெனப் புறப்பட்ட ஜெகதீசன் குடும்பமும், கருணாநிதியின் குடும்பமும், சிவபாதம் குடும்பமும் உடையார்கட்டில் சந்தித்துச்சேர்ந்துகொண்டன. உடையார்கட்டை அடைந்த சனத்தில் இடைவழியில் காயம் பட்டவர்களை அங்கிருந்து புதுக்குடியிருப்பை ஆஸ்பத்தரிக்கு அனுப்பினர் தொண்டர்கள். அங்கும் உயிர்காக்கும் மருந்துகளோ வேண்டிய அளவுக்கு மருத்துவர்களோ இல்லாமல் திணறிக்கொண்டிருந்தது ஆஸ்பத்தரி. அதன் வளவுக்குள் இருந்தாலே போதும் என்கிற மனநிலையில் இருந்த காயம்பட்டவர்களில் பலரும் தரையிலும் நெகிழித்தாள்களிலுமாகக் கிடத்தப்பட்டிருந்தனர். சிலர் வெளியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சாக்கு அல்லது பாய்களை விரித்தும் கிடத்தப்பட்டனர். சனங்களிடம் பணமில்லை, கடைகளில் பொருகளில்லை. குளிப்பில்லை. தூக்கமில்லை. உத்தரித்தலைந்தனர். அதுவும் குழந்தைகளை வைத்திருந்த குடும்பங்கள் பட்டதுயரம் சொல்லி மாளாது.
மக்களுடன் போராளிகளும் இருக்கிறார்கள் என்று சொல்லி அரசு இரசாயனக்குண்டுகளையும், ஷெல்களையும் வீசவீச அப்பிரதேசத்தில் மரணங்கள் மேலும் மலிந்தன. அவயவங்களை இழந்த மக்களும் , விலங்குகள் போல் இறந்த மக்களும் இறைந்து கிடந்தனர். அத்தனை கேவலமாகத் தமிழ் உயிரின் விலையும் மதிப்பும் தாழ்ந்துபோய் இருந்தது. இறப்பவர்களுக்காக அழவும், அவர்களை எடுத்துப்புதைக்கவும் மனிதர் இல்லாது போயினர்.
புதுக்குடியிருப்பு சந்தை பள்ளிக்கூடம் எல்லாம் சனங்கள் நிரம்பி வழிந்தார்கள். அங்கிருந்து மந்துவில் இரட்டைவாய்க்கால் வெள்ளாம்புள்ளி வட்டுவாகல்வரையில் வீதி நிறைந்த சனக்கூட்டமாக இருந்தது. அரசு புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தரியில் சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதற்காக அதற்கும் குண்டுவீசி அதை நிர்மூலம் செய்தது.
“ புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தரிமீது எதற்காக குண்டுகளை வீசினீர்கள்?” என வெளிநாட்டுப்பத்திரிகையாளர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொத்தாபாய ராஜபக்ஷவிடம் கேட்டபோது ”புதுக்குடியிருப்பு போர்வலயம். அங்கு ஆஸ்பத்தரியெல்லாம் மூடியாகிவிட்டது. அங்கு போகவும் மருத்துவம் பார்க்கவும் யாருக்கும் அனுமதியில்லை. அங்கு குண்டுகள் விழுவதையிட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களை யார் அங்கே போகச்சொன்னார்கள்? ” என்று கோபமாகக் கேட்டார்.
விசுவமடு தருமபுரம் உடையார்கட்டு தேவிபுரத்தில் மரணங்கள் மலியவும் உழவுஇயந்திரங்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டன. சனங்கள் பெருவாரியாக காட்டைக்குறுக்கறுத்தும் வயல்களினூடாகவும் வள்ளிபுனம், புளியம் பொக்கணை, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மாத்தளன், புது மாத்தளன் என்று இடம் பெயர்ந்தார்கள். பாதைகள் ஒன்றும் சுமுகமானதாக இல்லை. பெரும்பாலான வயல்களில் வெள்ளம் நின்றது. எங்கும் சேறு சகதியும் சதுப்பும்.
தண்ணீரூற்றுவிலிருந்து வந்த சனங்கள் முல்லைத்தீவு நந்திக்கடல், வட்டுவாகல் கடலேரிக்கரையோரம் முழுவதும் துருவங்களில் பெங்குயின்கள் நின்றதுபோல நிற்கலாயினர். அங்கும் ஷெல்கள் வந்து விழத்தொடங்கவும் சனக்கூட்டம் கடற்கரையோரமாக வடக்காக மாத்தளன் முல்லைவாய்க்கால் நோக்கி நகர்ந்தது. புதுமாத்தளன், மாத்தளனில்கூடிய சனங்களின் தொகை ஒன்றரை லக்ஷம்வரையிலாவது வரும். ஒதுங்க இடமில்லாதிருந்தவர்களை வெய்யிலும் தம்பாட்டுக்கு வாட்டியெடுத்தது. பசியில் சனங்கள் முசுட்டை, கொவ்வை, முள்ளுக்கீரை, முருங்கையிலை, வாழைக்குருத்து, தண்டு, கிழங்கு போன்றவற்றையெல்லாம் அவித்தும் அவியாமலும் சாப்பிடத்தொடங்கினார்கள். இன்னும் போவதாயின் கிழக்குக் கடலுக்குள் இறங்குவதைத்தவிர வேறு போக்கிடம் இல்லை என்றானது. இனியும் எங்களை எங்கே போகச்சொல்லுது அரசு? ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. கலைஞர் குழாம் டில்லிக்குச்சென்றுபேசி அவர்கள் தாங்கள் ’ஸ்ரீலங்கா அரசிடம் போரை நிறுத்தச்சொல்லுகிறோமென்று உறுதிமொழி’ வழங்கியவுடன் திரும்பிவந்து மெல்ல வேஷங்களைக் கலைத்துப்போடுகிறது.
>>> 9
சனங்கள் அச்சதுப்பு நிலங்களில் E L T U N Z எழுத்துக்களின் வடிவில் பதுங்குகுழிகளைத்தோண்டத் தொடங்கினார்கள். யோகபுரத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து E வடிவில் பாரிய பதுங்குகுழியொன்றை வெட்டினார்கள். பசியும் குழிதோண்டிய களைப்புமாய் துவண்டுபோயிருந்த வர்களைப்பார்த்து யோகபுரத்திலிருந்து அக்கப்பாடுபட்டு எடுத்துவந்த பூசினிக்காய்களில் ஒன்றை அவிப்பதற்கு பார்வதியக்கா சம்மதித்தார். ஏதோவொரு மனிதநேய அமைப்பு சாக்குகளில் பருப்பு, கடலைபோன்ற சிறுசிறுதானியங்களை எடுத்துவந்து விநியோகித்தது. இருந்த கொஞ்சம் அரிசியோடு இவை எல்லாவற்றையும் கலந்துபோட்டு பெரு அவியலாகப் பண்ணி எல்லோரும் சாப்பிட்டார்கள்.
பத்து இருபது வருஷங்களாக காணாத உறவுகளையெல்லாம் மாத்தளன் கடற்கரை கண்டுகொள்ள வைத்தது. ஆனாலும் எவர் மனதிலும் மகிழ்ச்சி இல்லை. இரத்தவாடையும் மரணத்தின் வாடையும் கலந்திருந்த காற்றில் அச்சந்திப்புகள் ஒரு இழவுவீட்டில் பார்த்ததைப்போலவே மகிழ்ச்சியற்று இருந்தன. உடையார்கட்டிலும் விசுவமடுவிலும் இறந்த மனிதவுடல்கள் தெறித்துக்கிடந்ததைப் பார்த்ததிலிருந்து சின்னம்மாவுக்கு சற்றே மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டது. பிரமை பிடித்து மாத்தளன் புதுமாத்தளன் கடற்கரைபூராவும் பாகேஸ்வரியும் வந்திருப்பாளோவென்று தேடி அலைந்து திரிந்தார்.
உச்சிவெய்யில் அடிக்கையில் மக்கள் துவண்டனர். சூரியன் சற்றே சாய்ந்துவிட்டால் வெட்டிய பங்கருக்குள்போய் இருக்கலாம். மாத்தளன் கடலை அண்மிய சதுப்புநிலப்பகுதியாதலால் பெரிய மரவிருக்ஷங்கள் இருக்கவில்லை எனினும் இளைஞர்கள் அலம்பல்போல நீண்ட கம்புகளை காடுகளில் வெட்டிக்கொண்டுவந்து சிறு பந்தல்கள்போலப்போட்டு மேலே தளப்பத்தோலைகளைப் பரவி மக்களைச்சிறிது வெய்யிலிலிருந்து காபந்து பண்ணினர். இரவுகளில் பல இலாந்தர்களும் கைவிளக்குகளும் இருந்தும் எண்ணை இல்லாததால் பயனற்று இருந்தன. காய்ந்த குச்சிகளைப் பொறுக்கிவந்து குவித்து அங்கங்கு எரித்து வெளிச்சம் உண்டாக்கப்பட்ட இடங்களில் மக்கள் சூழவிருந்து கதைத்தனர்.
அந்திசாய்ந்து சூரியன் வறுப்பது சற்றே தணிந்து கருணாநிதி, குலசிங்கம், பொன்னம்பலம், செல்வரத்தினம், நவரத்தினம் குடும்பம் அசோக், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீகாந்தன், பவான், மைக்கேல், மரியதாஸன், அரியநாயகம், சாந்தன், செல்லம்மா, பாக்கியமக்கா, சரஸு, குண்டுக்கமலா காசிநாதன் குடும்பமென்று என்று அவர்கள் பங்கருக்கருகிலிருந்த குடிசையில் ஒன்றாகக்கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்த சமயம் ஒரு மிதியுந்தில் 10 லிட்டர் தண்ணீர் கானுடனும், கைப்பிடியில் கொளுவியிருந்த சாக்குப்பையில் ஐந்து கொத்து அரிசியுடனும் மாதவன் வந்தான். பார்க்க எங்கேயோ குளித்து முழுகிவிட்டு வருபவனைப்போல புத்துணர்ச்சியுடன் இருந்தான். எப்பிடிக்கிடைத்ததோ தெரியவில்லை வாயில் வெத்திலைவேறு போட்டுக் குதப்பிக்கொண்டிருந்தான். ஆற்றாமையில் செல்லம்மாக்கா கேட்டா “ எங்காலையடாமோனை வெத்திலை?” ஐயோ அது வெத்திலையில்லணை பாக்குவெட்டி மரத்து இலை, வழியிலை பத்தையில கண்டாப்போல உருவிச் சப்பிக்கொண்டுவாறன்.” ‘டில்லிக்குப்போன கருணாநிதியும் கும்பலும் ராஜினாமா எண்ணத்தை கைவிட்டுவிட்ட சேதி’யையும் அவர்களுக்குச் சொன்னான்.
இராசையர் சொன்னார்: “ கருணாநிதிமட்டுமல்ல எதிரணியில நின்று எங்கடபிரச்சனையைப் கதைக்கிற அத்தனைபேருக்கும் எம்மீதான அவர்களின் அக்கறை கரிசினை உண்மையென்றால் உடன எல்லாரும் ராஜினாமா செய்யவேணும் அப்பதான் மத்திய அரசுக்கு ஒரு அதிர்ச்சியாயிருக்கும். எதிர்க்கட்சியில்லாத மாநில அரசும் ஒரு மோக்கேனந்தான், எதிர்க்கட்சியில்லை இனிக்காங்கிரஸோட ஓடிப்போய் ஒட்ட என்றுவிட்டுக் கருணாநிதியும் தைரியம்வந்து ஒருவேளை ராஜினாமாப் பண்ணலாம். எல்லாக்கட்சிகளும் இராஜினாமா செய்தால் ஒரு மாநிலத்தின்ரை எதிர்ப்பைச் சம்பாதிக்கவிரும்பாத மத்திய அரசு தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டு ஒருவேளை போர்நிறுத்தம் செய்யச்சொல்லி இலங்கை அரசைக்கேட்கலாம். ஆனால் யாரும் செய்வினமோ……… இவ்வளவு கதைச்ச ஜெயலலிதா செய்வாவோ?”
“ எங்கட ஆபத்துபாந்தவர்கள் எல்லாரும் செத்துப்போச்சினம் என்று இருப்பம். முந்திக்கொண்டுவந்து போட்ட உணவுப்பொட்டலத்தை மனிதாபிமானம் அகிம்சை என்றுபேசுகிற காந்திதேசக்காரன் இப்ப கொண்டுவந்து போடவேணும். இப்போதான் எங்களுக்கு முன்னைக்காட்டிலும் தேவைகூட. இத்தனை அவலத்தில இல்லாத உதவி இனி வந்தென்ன விட்டென்ன?” இதைச்சொல்கையில் தம்பிப்பிள்ளையரின் கண்கள் நீரால் நிறைந்து உதடுகள் துடித்தன.
விவாதங்கள் இப்படி நடந்துகொண்டிருக்கவும் அதில்கலவாது ஒரு குச்சியால நிலத்தைக்கீறிக்கொண்டு நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்த மாதவன் சொன்னான்: “ நான் இனிப்போகவேணும்.”
“ இருட்டுக்கட்டியிட்டுது………. எங்கே இனிப்போகப்போறாய் மாதவன்?” மரியதாஸ் கேட்டான்.
கருணாநிதி இடைமறித்துச்சொன்னான்: “ ஒரு போராளி எங்கே போறானென்று உங்களுக்குச் சொல்லுவானே…………….. நீங்கள் அப்பிடிக் கேட்கிறதுஞ்சரியில்லை.”
“ எல்லாரும் உங்களுக்குள்ள கடிபடாமா ஒற்றுமையா இருங்கோ. எனக்கொரு வேலை பணிக்கப்பட்டிருக்கு அந்தக் கடமையை முடிக்கவேணும். இப்ப உங்களுக்குச் சொல்றதுக்கு என்னட்ட இன்னுமொரு சின்னத்தகவல் இருக்கு.”
இப்போது எல்லாரும் அவன் முகத்தைப் பார்த்தனர்.
“ ஆறுமாசத்துக்கு முன்னால எங்கட உயிலங்குளம் மருத்துவமுகாமை ஆமி குண்டடிச்சபோது சின்னம்மா ஆச்சியின்ர பாகேஸ்வரியக்கா செத்துப்போனா. அது ஆழமான பங்கரொண்டு, அவ கீழ காயப்பட்ட போராளிகளைப் பராமரிச்சுக்கொண்டிருந்தவ. எங்கள்ல எத்தனையோ பேருடைய உயிருகளை மீட்டுத்தந்த அந்தமனுஷியின்ர உயிரை எங்களால காப்பாத்த முடியாமப்போச்சு. சின்னம்மா ஆச்சியைப்பார்க்கிற நேரமெல்லாம் எனக்கு உதறுது, மனிஷியின்ரை முகத்தைப்பார்த்து நேராய்ச்சொல்ற பலம் என்னட்ட இல்லை. நீங்கள் யாரும் சமயம் வரும்போது அவ்விட்டை விஷயத்தைச் சொல்லிவிடுங்கோ. ”
தன் கண்கள் பனித்திருப்பதை அவர்கள் பாராதிருக்க அரிசியையும் தண்ணீர்கானையும் அவிழ்த்துச் சடுதியில் நிலத்தில் வைத்துவிட்டு மிதியுந்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
அடுத்த நாள் விடுதலைப்புலிகளுக்கான இரகசிய வழங்கல் வழிகளை
அடைத்துவிட்டு முள்ளிவாய்க்காலை மருவிய ஆனந்தபுரத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு முற்றுகை வெறியில் நின்ற ஆயிரக்கணக்கான இராணுவத்தை பெருவாய்க்கால்-கேப்பாபுலவில் விடுதலிப்புலிகள் ஊடறுத்து தாக்கியதில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மடிந்தனர். விடுதலைப்புலிகள் இறுதியாகச்செய்த பெரியதாக்குதல் அதுதான். அதில் தீபன், கடாபி, விதூஷா, துர்க்கா, மணிவண்ணன், நாகேஷ் போன்ற பல கேணல் தரத்துப்போராளிகளோடு மாதவனும் மடிந்து போனான். தற்கொலைத்தாக்குதலாயிருக்கலாம் உடலம் கிடைக்கவில்லை. செய்திவந்தபோது அனைவரும் வாய்விட்டு அழுதனர்.
“ உனக்கு வாய்க்கரிசி போடவென்றுதான் அரிசி கொண்டுவந்தாயோடா மகனே? ” என்று சொல்லிச்சொல்லி அவனது தாயும், சகோதரங்களும், பாக்கியமக்காவும் மண்ணை அள்ளித்தலையில் போட்டுக்கொண்டு புலம்பினர்.
முள்ளிவாய்க்காலை போர் இல்லாத பிரதேசமாக (NO WAR ZONE) அரசு அறிவித்தது. அங்கு செல்பவர்களுக்கு அரிசியும் பருப்பும் சீனியும் நிவாரணப்பொருட்களாக கொடுக்கிறார்கள் என ஒருசெய்திபரவவும் பசிதாங்காத சின்னம்மா அங்கே போனார். நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது உண்மைதான். நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அங்கும் ஷெல்கள் தொடர்ந்து விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருமுறையும் ஷெல் வெடித்தவுடன் மக்கள் நிலத்தில் விழுந்து படுத்தார்கள். சத்தம் எழுப்பாமல் கத்திபோல வந்த சில்லொன்று வரிசையில் காத்துநின்ற ஆறுபேரை சீவிச்சாய்த்தது. சின்னம்மாவுக்கு இடுப்பில் சிறிய வெட்டுத்தான். உடனே சிகிச்சை கிடைத்திருந்தால் அவர் உயிர்தப்பியிருந்திருப்பார். கட்டுப்படுத்தப்படாத குருதிப்பெருக்கால் அநியாயத்துக்கு மரணமானார். பல இராணுவத்தினர் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் இராணுவம் மறுநாளும் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியெங்கும் எரிகுண்டுகளையும் ஷெல்களையும் வீசவும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே நாள்முழுவதும் இருக்கவேண்டியதாயிற்று.
“ எப்போதான் இந்த குண்டுகள், பீரங்கிச்சத்தங்கள் ஓயப்போகுதோ?”
“ சனம் சிலது இன்னும் முள்ளிவாய்க்கால் பக்கம்தானாம் போகுது ”
“ஏனாம் ஆமிக்காரன் தோட்டாச் செலவில்லாமல் கொல்லட்டுமென்டோ?”
கருணாநிதியின் மூன்றுவயது மகள் ஆதர்ஷாவுக்கு நடப்பது எல்லாமே குழப்பமாக இருந்தது.
“ எதுக்கு அப்பா ஆமி எங்களை தொரத்துது?”
“ தமிழர்கள் போராடுறாங்களாம்”
“ ஏனாம் போராடீனம்?”
“ எங்கட வீடும் முற்றமும் ஊர்களும்
எங்களுக்கே வேணுமென்றுதான்”
“ ஆமி எங்கேயாம் போகச்சொல்லித் தொரத்துது?”
“ அதுதான் தெரியல்ல குஞ்சு………… நாம முடிஞ்சவரைக்கும் ஓடுவம்”
“ ஏன் நாங்கள் வீட்டில இருக்கப்படாதாம்?”
“அவங்கள் குண்டு வீசப்போறாங்களாம்”
“ ஏனாம் குண்டுகள் போடீனம்?”
“ போரெண்டு வந்தால் அப்பிடித்தான் மகள்”
“ அப்போ எல்லா ஊரிலும் இப்பிடித்தான் ஆக்கள் ஓடீனமோ?”
“ சிலபேர் ஓடுறதும், சிலபேர் துரத்திறதும் உலகம் பூரா இருக்குது செல்லம்.”
“ இன்னும் எவ்ளோ நேரம் இதுக்குள்ள இருக்கோணும்?”
“ தெரியல்ல கொஞ்சம்பொறு கண்ணா வெளியே போகலாம் ”
“ இப்போ போனால் குண்டோ ஷெல்லோ வெடிச்சிடும்.”
“ எனக்கு நெடூவலும் இருக்கக்கால் உளையுது………. நான் ஒருக்கா வெளியே போயிட்டு ஓடிவரட்டே?”
“ அவங்கள் குண்டு போட்டாப்பிறகு போகலாம்டா”
“ அப்ப அவங்களைக் கெதியாய் கொண்ணாந்து போடச்சொல்லுங்கோவன் நான் சீக்கிரம் மேலேபோயிட்டு விளையாட.”
இடுக்கண்ணிலும் எல்லோரும் சிரித்தனர்.
‘டாம்’ ’டும் டும் டும்’ என மீண்டும் ஒவ்வொரு பீரங்கி தீர்க்கப்படுகையிலும் வெடிச்சத்தங்கள் எழுந்து அவை கடலில் எதிரொலித்துப் பீதியைக்கிளப்பின.
“மல்டிபறல்தான் குத்திறான் போல கிடக்கு” என்றான் பொன்னம்பலம்.
தினப்படி குளிப்பு முழுக்கு அனுட்டானம் சூர்ணம் திரிபுண்டரம் விரிசடாமுனிக்கோலம் அனைத்தும் கலைந்து அழுக்கு நான்கு முழத்தில் ஒரு பரதேசியைப்போலிருந்த சின்னத்தம்பிச்சாத்திரியார் இன்னொருதரம் சுனாமி வந்து அழிச்சகதையை விஸ்தாரம் பண்ணி நினைவுகூர்ந்துவிட்டு “இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவனையும்” என்று சபித்து ஓய கருணாநிதியும் மரியதாஸும் கிழவரின் வாயைக்கிளற ஆரம்பித்தனர்.
>>> 10
பகலில் சேகரித்த காய்ந்த சுள்ளிகளை ஒரு தகட்டில் அடுக்கி எரித்ததில் பதுங்குகுழிக்குள் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்தது. நவரத்தினமும் செல்வரத்தினமும் அது அணையாமல் தொடர்ந்து எரிவதற்கேற்ற வகையில் குச்சிகளை வாகாக அடுக்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர்.
“ சாத்திரியார்………… இப்போ பூமியை பிரபஞ்சத்திலுள்ள மற்ற கோள்கள் பாதிக்குது. ஒன்று இழுக்குது மற்றது தள்ளுது இன்னொன்று குடையுது மற்றொன்று சொறியுது அதனாலதான் இங்கே சுனாமி பூகம்பம் வெள்ளப்பெருக்கு வரட்சியெல்லாம் வருகுதென்றால் அதுக்கும் எங்கட ஞானவிலாசத்துகுள்ள பிடிபடாத ஒரு அறிவியல் விளக்கம் இருக்குமென்றுவிட்டுக் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அவனவன் வெவ்வேறு நேரத்தில பிறந்திட்டான் என்பதற்காக ஒரு கிரகம் அமுதாவின்ரை பிள்ளைக்கு செல்வத்தையும் சுகபோகத்தையும் ஆரோக்கியத்தையும் குதூகலத்தையும் அள்ளித்தந்திட்டு குமுதாவின்ரை பிள்ளைக்கு ரோகத்தையும் தரித்திரதையும் கலியையும் இடப்பெயர்வையும் பரதேசியாய் உலையவும் வைக்குமென்றதை என்னுடைய மனது ஒத்துக்கொள்ளுதில்லை. உதுகள் எல்லாத்தையும் விடுங்கோ, இப்பிடி யோசிப்போமே……… இப்போ வீடுவாசலைத் துறந்து ஒதுங்க ஒரு கூரையில்லாமல் தெருவில நிண்டு மாயிற இந்தச்சனங்கள் இத்தனை லக்ஷம்பேரையும் ராசிகளின் தொகை பன்னிரண்டால வகுத்துப் பார்த்தாலும்…………………
தைரிய ஸ்தானத்தில் சந்திரனும்
சுக ஸ்தானத்தில் செவ்வாயும்
பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும்
பூர்வபுண்ணியத்தை வழங்கியபடி காரியும்
திவ்ய ஒளியை இறைக்கிற சூரியனும்
லாபஸ்தானத்தில் குருவும்
ஞனோஸ்தானத்தில் புதனும்
உச்சம் பெற்ற ஜீவன ஸ்தானத்தில் கேதுவுமாய்
நின்று உச்சகட்டப் பலன்தந்துகொண்டு இருக்கிற ஜாதகர்கள் குறைஞ்சது ஒரு பத்தாயிரம் பேர் இருப்பினமோ இல்லையோ? ”
இடையீடுசெய்த மரியதாஸ் ஏதோ அவரைக் கிண்டல் பண்ணுவதற்கு “சாத்திரி” என்றுவிட்டு இரண்டு ஆவர்த்தனம் தள்ளி ஓசைலயத்துடன் “—யார் ” என்று ஒரு ஒட்டுப்போட்டான்.
சாத்திரியார் அவனைக் ‘கொஞ்சம் பொறு’ என்பதாகக் கைகாட்டிவிட்டுத் தான் எதையோ சொல்வதற்குக் கண்களை மூடிக்கொண்டு பீடிகையாக
“ தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடையன் நம்பெருமான்…… “
என்னுகையில் இராணுவத்தின்திசையிலிருந்துவந்தபுல்டோஸர்ஒன்றுதிடுப்பெனமடங்கித்திரும்பிபதுங்குகுழிஅருகிருந்தமண்மேட்டைத் தன் பாரிய அலகால் ஒரே உந்தில் வெறியோடு தள்ளிக்கொண்டுவந்துஅவர்களின்பதுங்குகுழியைமூடி நிரவி விட்டுஅதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம்ஆடியது.
2010 Berlin.
End ***
(January-March 2010) காலம் (கனடா)